கும்மிடிப்பூண்டி, ஏப். 5: கும்மிடிப்பூண்டி அருகே, கோட்டக்கரை பகுதியில் காட்டு பன்றி கடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேர்வாய், ரெட்டம்பேடு, ஆத்துப்பாக்கம், மங்காவரம், மாதர்பாக்கம், பூவலம் பேடு, அய்யலூர், தேவம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோட்டக்கரை அரசு மருத்துவமனை அருகே அப்பகுதியை சேர்ந்த ஸ்வேதா (22), பானு (40), பச்சையப்பன் (60) ஆகிய 3 பேர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 2 காட்டு பன்றிகள் அவர்களை விரட்டி கடித்தன. இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து 3 பேரையும் மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.