ஆற்காடு அருகே ஆட்டை மீட்க முயன்றபோது 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த வாலிபர் மீட்பு

ஆற்காடு, ஏப்.3: ஆற்காடு அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் 60 அடி ஆழ கிணற்றில் விழுந்தவரை தீயணைப்பு படையினர் மீட்டனர். வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள வேம்பி அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் தங்களது ஆடுகளை நேற்று அதே பகுதியில் உள்ள நிலத்தில் மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது, அதில் ஒரு ஆடு அங்குள்ள பொதுக் கிணற்றில் தவறி விழுந்தது.

இதைக்கண்ட பிரகாஷ் கயிறு மூலம் ஆட்டை மீட்க கிணற்றில் இறங்கினார். அப்போது, எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து பிரகாஷ் கிணற்றில் தவறி விழுந்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து கலவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி பிறகு கயிறு மூலம் பிரகாஷ் மற்றும் அவரது ஆட்டையும் மீட்டனர். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரகாஷ் கலவை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.

Related Stories: