திருமானூர் அருகே பாலம் கட்ட பள்ளம் தோண்டியதால் மாற்றுப்பாதையின்றி மாணவர்கள் அவதி

அரியலூர், மார்ச் 22: அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கட்டி முடிக்கப்பட வேண்டிய பாலம், தற்போது கட்டப்படுவதற்காக தோண்டி போடப்பட்டிருப்பதால் தேர்வு நேரத்தில் மாற்றுப்பாதை இல்லாமல் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர், புள்ளம்பாடி நெடுஞ்சாலையில் உள்ளது கண்டராதித்தம் (க. மேட்டுத்தெரு) பிரிவு சாலை. இந்த சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்நிலையில் இந்த பிரிவு சாலையின் முகப்பில் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் ஒரு சிறுபாலம் கட்ட கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சுமார் ஒரு வருடம் ஆகியும் அந்த பாலம் கட்டப்படவில்லை.

இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சிறுபாலம் கட்டப்போவதாக சாலையின் குறுக்கே தோண்டி போடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு மாற்றுப்பாதை எதுவும் அமைக்கப்படாததால் கண்டரதித்தம் மற்றும் க.மேட்டுத்தெரு ஆகிய கிராமங்களை சேர்ந்த இந்த சாலையின் வழியாக வரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 6 கி.மீ. சுற்றி வந்துதான் மெயின்ரோட்டை அடைகின்றனர். மேலும் இந்த ஊர்களுக்கு வரும் பள்ளி வாகனங்களும் இதேபோல் சுற்றி வந்துதான் மாணவர்களை அழைத்து செல்கின்றனர். இதுபோல் மாணவர்களின் தேர்வு நேரத்திலும், தேர்தல் நேரத்திலும் எப்போதே கட்டி முடிக்க வேண்டிய பாலத்தை காலம் கடந்து இந்த நேரத்தில் சாலையை தோண்டி போட்டிருப்பது பொதுமக்களிடமும், மாணவர்களிடத்திலும் வேதனையளிக்கிறது.

Related Stories: