வேலூர் அருகே காரில் கொண்டு சென்றபோது சிக்கியது தொழிலதிபர், டாக்டர் உட்பட 4 பேரிடம் 32.70 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை

வேலூர், மார்ச் 22: வேலூர் அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்றபோது தொழிலதிபர், டாக்டர் உட்பட 4 பேரின் பணம் 32.70 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் நேற்று பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரை ஓட்டி வந்தவர் கொணவட்டத்தை சேர்ந்த யுனானி டாக்டர் ஹமினுதீன் என்பதும், கணக்கில் வராத 2 லட்சத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், நேற்று காலை 11 மணியளவில் நிலை கண்காணிப்பு குழு தாசில்தார் பாக்கியநாதன், எஸ்ஐ சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை அருகே அவ்வழியாக வந்த காரில் நடத்திய வாகன சோதனையில் வாணியம்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் இக்பால் என்பவர் உரிய ஆவணங்களின்றி 5 லட்சம் பணத்தை கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சப்-கலெக்டர் மெகராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.

மேலும் தேர்தல் பறக்கும்படை தாசில்தார் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் வேலூர் சர்வீஸ் சாலை வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் வாணியம்பாடியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் முருகன்(45) ஆவணமின்றி 1.90 லட்சம் பணம் கொண்டு செல்வது தெரியவந்தது.

அதேபோல், தேர்தல் பறக்கும்படை தாசில்தார் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் வேலூர் சர்வீஸ் சாலையில் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, வாணியம்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஷபியுல்லா(48), ஆவணமின்றி 23.80 லட்சம் பணம் கொண்டு செல்வது தெரியவந்தது.

நேற்று மட்டுமே 4 பேரிடம் பறிமுதல் செய்த பணம் 32.70 லட்சத்தையும் தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த பணத்தை உரிய ஆவணங்களை காட்டி பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க சப்-கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார்.

Related Stories: