ரசாயன பூச்சிகொல்லி மருந்துகளால் அழியும் சிட்டுக்குருவிகள்

ஊட்டி, மார்ச் 21:  உலகில் பெருகி வரும் நாகரீக மாற்றத்தால் பல்வேறு உயிரினங்கள் அழியும் பட்டியலில் உள்ளன. இவற்றை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை ேமற்கொண்டு வருகின்றனர்.

   தற்போது சிட்டுகுருவிகள் உலகம் முழுவதும் அழிந்து வரும் பறவையினங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் சிட்டு குருவிகளை பாதுகாக்கும் நோக்கிலும், செயற்கையான கூண்டுகள் அமைத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும். அந்த வகையில் ஊட்டி அரசு கலை கல்லூரி வன விலங்கு உயிரியல்துறை உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மாணவர்கள் ஜெயராமன், சாம்சன் ஆகியோர் ஊட்டி நகரில் ஆய்வு மேற்கொண்டனர். பி.வி.சி., பைப், மண் பானை கூடு, மரகூண்டு, அட்டை பெட்டி உள்ளிட்ட 5 வகையான 660 செயற்கை கூண்டுகள் அமைக்கப்பட்டது. இதில் மார்கெட் பகுதியில் தானியங்கள் மற்றும் புரதசத்து உள்ள உணவுகள் கிடைப்பதால், கூண்டுகள் வைத்த 3 நாட்களில் சிட்டு குருவிகள் பயன்படுத்த துவங்கியுள்ளது. இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்ட கூண்டுகளில் 1 மாதத்தில் கூடுகட்டியது. ஆனால் கல்வி நிறுவனங்களில் வைக்கப்பட்ட கூண்டுகளை எதிர்பார்த்த அளவில் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. 3 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  இதுகுறித்து ஊட்டி அரசு கலை கல்லூரி உதவி ேபராசிரியர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிட்டு குருவிகளை காண முடிகிறது. உணவு கிடைக்கும் இடங்களில் அதிகளவில் சிட்டு குருவிகள் வாழ்கின்றன. அப்பகுதிகளில் செயற்கை கூடுகள் அமைத்தால் அவற்றை பயன்படுத்தி கொள்கின்றன. செல்போன் டவர்களால் சிட்டு குருவிகள் அழிகின்றன என்பது அறிவியல் பூர்வமாக இன்னும் நிருபிக்கப்படவில்ைல. எதிர்காலத்தில் மாணவர்கள் இதுகுறித்து கண்டிப்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கான்கீரிட் கட்டிடங்களாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிகொல்லி மருந்துகள் போன்றவை சிட்டுகுருவிகள் அழிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.  அதுமட்டுமின்றி உணவு, தண்ணீர் கிடைப்பதால் ஒரே இடங்களில் அதிகளவிலான சிட்டு குருவிகள் வாழ்கின்றன. அவற்றிற்குள்ளேயே இனச்சேர்க்கை நடப்பதும் அவற்றின் அழிவுக்கு காரணமாக அமைகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் சிட்டுகுருவிகள் வசிக்க கூடிய வகையில் கூடுகள் அமைக்க வேண்டும். கோடை காலங்களில் தண்ணீர் வைக்க வேண்டும். தானியங்களை தூவி வைத்தால் சிட்டு குருவிகளை பாதுகாக்க முடியும், என்றார்.

Related Stories: