தேர்தல் முறைகேடு தடுக்க லாட்ஜ்களில் தங்குவோர் கண்காணிப்பு

கோவை, மார்ச் 20: தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோவை நகர், புறநகரில் ஓட்டல், லாட்ஜ்களில் தங்குபவர்களை கண்காணிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் மற்றும் லாட்ஜ்களில் தங்குவோர் விவரம் மற்றும் அவர்களது முகவரி சரியாக உள்ளதா என ஓட்டல் நிர்வாகங்கள் கவனிக்கவேண்டும். ஒரே நபர் பலருக்கு அறைகளை முன்பதிவு செய்து தருகிறாரா, கட்சி, அமைப்புகள் சார்பில் ஓட்டல் அறைகள் பதிவு செய்யப்படுகிறதா என கவனிக்கவேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 கட்சியினர் அதிக நாட்களுக்கு லாட்ஜ் அறைகளை முன்பதிவு செய்தால் அந்த விவரங்களை தேர்தல் பிரிவினருக்கு உடனடியாக தெரிவி–்க்கவேண்டும். லாட்ஜ்களில் பணம், பொருட்களை வைத்து ஓட்டுக்காக வழங்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க கூடாது, திருமண மண்டபம், விழா கூடங்களில் கட்சியினர்களை தங்க வைக்க கூடாது. தேர்தல் நடத்தை விதிகளின்படி தங்கும் விடுதிகள் செயல்படவேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில் புறநகர் பகுதிகளில் ஏராளமான காட்டேஜ்கள் உள்ளன.

இதில் சில காட்டேஜ்களை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சிலர் முன் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவரங்களை தேர்தல் பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக ஓட்டு பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் வெளியூரில் இருந்து கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் தங்குவதற்காக அனுமதிக்க கூடாது. ஓட்டு பதிவை பாதிக்கும் வகையிலான நடவடிக்கை கூடாது என தேர்தல் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: