நாகர்கோவிலில் ஆம்னி பஸ்சில் ₹34 லட்சம் பணம் பறிமுதல்

நாகர்கோவில், மார்ச் 20: நாகர்கோவிலில் ஆம்னி பஸ்சில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ₹34 லட்சம் பணத்துடன் வாலிபர் சிக்கினார்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம்தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலையொட்டி பண வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற ெதாகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 வீதம் மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் வரை சுமார் ₹14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள துணை தாசில்தார் சரஸ்வதி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஐசக் நியூட்டன், போலீசார் ராஜேஷ், ஜெயசந்திரன் ஆகியோர் கொண்ட பறக்கும்படை குழுவினர் நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் பகுதியில் நேற்று காலை வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ்சில் ஏறி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பஸ் திருப்பதியில் இருந்து நாகர்கோவில் வரும் பஸ் ஆகும். அந்த பஸ்சில் ராமநாதபுரத்தை சேர்ந்த  முகமது அபுல்தீன் (32) என்பவர் இருந்தார். அவரிடம் இருந்த பேக்கை சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து முகமது அபுல்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை பஸ்சில் இருந்து இறக்கி, தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த பணத்தை சோதனை செய்த போது அதில் மொத்தம் ₹34 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது. அந்த பணம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என கேட்டதற்கு  முகமது அபுல்தீனிடம் முறையான பதில் இல்லை. மதுரையில் ஒருவர் பணம் கொடுத்ததாகவும், நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் இறங்கியதும் ஒரு நபர் போன் செய்து பணத்தை பெற்றுக் கொள்வார் என்றும் தெரிவித்தனர்.

அதன்படி நான் பணத்தை கொண்டு வந்தேன் என்று முகமது அபுல்தீன் தெரிவித்தார். இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் சார்நிலை கருவூலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகமது அபுல்தீன் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். பணத்துக்கான உரிய ஆவணங்கள் அளித்து அதை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர். தனியார் ஆம்னி பஸ்சில் ₹34 லட்சம் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: