வாக்களிப்பது ஜனநாயக கடமை குமரி கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம்

நாகர்கோவில், மார்ச் 20:   வாக்களிப்பது தொடர்பாக குமரி மாவட்ட கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18ம்தேதி நடக்க இருக்கிறது. தேர்தலில் பண வினியோகத்தை தடுக்கவும், 100 சதவீத வாக்குப்பதிவை எட்டவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு அனைவரும் வாக்களிக்க வாருங்கள். வாக்களிக்க பணம் வாங்காதீர்கள் என்று பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில்  மாணவ, மாணவிகள் சார்பில் ஊர்வலம் நடந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் நேரடியாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாகர்கோவிலில் நேற்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் ஆணையம் சார்பில், மாநகராட்சி பணியாளர்கள் மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

அதில் நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு. வாக்களிப்பது நமது அனைவரின் ஜனநாயக கடமை ஆகும். எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது. எனவே வாக்குப்பதிவு அன்று  அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும். வீட்டில் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரையும் வாக்களிக்க செய்யும் வகையில் மாணவ, மாணவிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் மாணவிகள் இணைந்து, தவறாமல் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதே போல் மேலும் பல கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Related Stories: