கருமத்தம்பட்டியில் ரூ.42 லட்சம் மதிப்பில் நூலகம் கட்டிட பணி துவங்கியது

சோமனூர், மார்ச் 8: கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் வளாகத்தில் செயல்பட்டு வந்த நூலகம், கடந்த 1998ஆம் ஆண்டு கருமத்தம்பட்டி காவல் நிலையம் எதிரே புதிய சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் கடந்த 2009ஆம் ஆண்டு ஆறு வழிச்சாலை அமைக்கும் போது சாலை விரிவாக்கத்தின் போது இந்த நூலகம் இடிக்கப்பட்டது, அப்போது அதற்கான இழப்பீட்டுத் தொகையையும், கோவை மாவட்ட நூலகத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது நூலகம் அமைப்பதற்கு அரசு கட்டிடம் கிடைக்காததால், கருமத்தம்பட்டி அடுத்த வேட்டைக்காரன் குட்டை பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது, கடந்த 10 ஆண்டுகளாக வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் அருகே உள்ள ஐந்து சென்ட் நிலம் நூலகத்திற்காக கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த இடம் வழங்கி 5 ஆண்டுகள் ஆகியும், கோவை மாவட்ட நூலகத்துறை சார்பில் கட்டிடம் அமைக்க முன்வரவில்லை. இந்நிலையில் மாவட்ட நூலகத் துறை சார்பில் கருமத்தம்பட்டியில் புதிய நூலகம் கட்டுவதற்கு ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,இந்த ஐந்து சென்ட் இடத்தில் இரண்டு மாடி கட்டிடம் அமைத்து, இங்கு முழு நேர நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது நூலகம் கட்டுவதற்கான பணி துவங்கி உள்ளதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: