நாகர்கோவில் மாநகராட்சிக்கு புத்தன்அணையில் இருந்து குடிநீருக்கு தண்ணீர் எடுக்கக்கூடாது: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு

நாகர்கோவில், பிப். 28:  குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை அதிகாரி வேதஅருள்சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) குணபாலன், வேளாண் துணை இயக்குநர் மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அசோக் மேக்ரின், விவசாய பிரதிநிதிகள் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை, விஜி, செண்பகசேகரபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:  விவசாய பிரதிநிதிகள்:  மண்டைக்காடு கோயில் திருவிழா வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பக்தர்கள் வசதிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அதுபோல கடைமடை பகுதிகளில் நெல் அறுவடை முடியாமல் உள்ளது. அங்கு தொடர்ந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும்.

அதிகாரிகள்: தண்ணீர் திறந்துவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய பிரதிநிதி கதிர்வேல்:  குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகள், ஓடைகள் நீர்வரத்து பாதைகள் ஆகிய நீர்நிலைகளில் பலர் ஆக்ரமிப்பு செய்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பல ஆக்ரமிப்பு இடங்களுக்கு வருவாய்துறைக்கு கரம்தீர்வை கட்டப்படுகிறது. இதனால் ஆக்ரமிப்பு எடுக்க செல்லும்போது, வருவாய்துறையினருக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதனால் ஆக்ரமிப்பு செய்துள்ள இடத்திற்கு கரம்தீர்வை கட்டிக்கொடுக்க கூடாது.

அதிகாரிகள்:  நீர்நிலை ஆக்ரமிப்புகள் பல அகற்றப்பட்டுள்ளன. மேலும் அகற்ற நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. புலவர் செல்லப்பா:  மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தண்ணீர் கசிவு அதிகம் ஏற்பட்டு வருகிறது. அதுபோல பல செடிகள் வளர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலத்தை சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை அகற்ற வேண்டும் என கடந்த கூட்டத்தில் தெரிவித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

அதிகாரிகள்: மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தண்ணீர் கசிவை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாய பிரதிநிதிகள்:  பேச்சிப்பாறை அணையில் தூர்வார வனத்துறை முட்டுக்கட்டை போட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுத்து, பேச்சிப்பாறை அணையில் தூர்வார வேண்டும். அதுபோல் நாகர்கோவிலுக்கு குடிநீருக்காக புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரக்கூடாது. அதிகாரிகள்: அரசுக்கு இதுதொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பத்மதாஸ்:  ரேஷன்கடைகளில் விற்பனையாளர்களுக்கு உதவியாக எடையாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அரசால் நியமிக்கப்பட்டவர்களா? அரசு சம்பளம் வழங்குகிறதா? எந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதிகாரிகள்: விற்பனையாளர்களுக்கு உதவியாக எந்த கடையிலும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அப்படி வேலை செய்தால், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 வின்ஸ்ஆன்றோ: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குளங்கள் சாலை அமைப்பதற்காக நிரப்பப்பட்டு வருகிறது. கேட்டால் பாலங்கள் அமைக்க மண்போடப்படுகிறது என கூறுகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் குளங்களில் தண்ணீர் இல்லை. மேலும் தண்ணீர் இருக்கும் குளங்களை வற்றவைத்து, பாலம் அமைக்கலாம். இதற்காக குளத்தை மண்போட்டு நிரப்பகூடாது. விவசாய பிரதிநிதிகள்:  கடந்த ஆண்டு போல குளங்களை தூர்வார விவசாயிகளுக்கு அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள்: கடந்த ஆண்டைபோன்று, விவசாயிகள் மனு கொடுத்து, இலவசமாக குறிப்பிட்ட அளவு மண் எடுத்துக்கொள்ளலாம். விவசாயபிரதிநிதி: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் கல்குவாரியால், வீடுகள், விவசாய நிலங்கள், குளங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கல்குவாரிகளை மூடநடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள்: கல்குவாரிகளால் என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முடிவுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மூர்த்தி: கல்குளம் தாலுகா பகுதி தலக்குளத்தில் உள்ள ஆலயன்குளத்தில், ஆகாயதாமரை மற்றும் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இக்குளத்தினை அரசு செலவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவை கண்ணன்: நாகர்கோவில் நரக பகுதியில் மினிபஸ்கள் தடமாறி இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாரபோக்குவரத்து துறை அதிகாரிக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தடமாறி இயக்கப்படும் மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயபிரதிநிதிகள்:  வருடம்தோறும் விவசாய திருவிழா நடத்தவேண்டும். அப்போது விவசாய நிலங்களில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு பரிசு வழங்கவேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: