கேரளாவில் முதல் முறையாக பழங்குடி மக்கள் வசிக்கும் இடமலைகுடியில் நூலகம்

மூணாறு,பிப்.28:  கேரளா மாநிலத்தில் முதன் முறையாக பழங்குடி மக்கள் வசிக்கும் இடமலைகுடி பகுதியில் நூலகம் துவங்கப்பட்டுள்ளது. மூணாறில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இடமலைகுடி. இங்கு 25 குடிகள் அமைந்துள்ளன. மேலும் ஏராளமான ஆதிவாசி குடும்பங்கள் இங்கு குடியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆதிவாசி குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி அறிவுக்காக இங்கு பழங்குடி ஆரம்ப பாடசாலை துவங்கப்பட்டுள்ளது. இங்கு பயிலும் குழந்தைகள் மற்றும் ஆதிவாசி மக்களின் பொது அறிவு வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் கேரளா மாநிலத்தில் முதல் முறையாக இடமலை குடியில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் விதமாக இந்த நூலகத்தில் பிரபலங்களின் வாழ்க்கை சரித்திரம், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் பிரபல மனிதர்களின் பயணத் தொகுப்புகள், தியாகிகளின் சரித்திரங்கள் உள்ளடக்கிய ஏராளமான புத்தகங்கள் வாசிப்பதற்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்போடு நூலகம் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலகத்தை இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஹச்.தினேசன் நேற்றுமுன்தினம் துவங்கி வைத்தார். இதுகுறித்து பாடசாலையின் ஆசிரியர் வி.சுனீஸ் கூறுகையில்,`` கேரள மாநிலத்தில் அதிக அளவு ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கும் பகுதி இடமலைகுடியாகும். மேலும் ஏராளமான குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் அறிவை மென்மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும். மேலும் இவர்களை மாநிலத்தில் உயர் நிலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் பழங்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்த போகிறோம்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: