பள்ளபட்டி அரசு மருத்துவமனை பின்புறம் நங்காஞ்சி ஆற்றில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு

அரவக்குறிச்சி, பிப். 26: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் நங்காஞ்சி ஆற்றில் பள்ளபட்டியின் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. இதில் புரண்டு அட்டகாசம் செய்யும் பன்றிகளால் நோய் பாதிப்பு ஏற்படும் முன்பு சாக்கடை கழிவுகள் நங்காஞ்சி ஆற்றில் கலப்பதை தடுத்து மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் நங்காஞ்சி ஆற்றில் பள்ளபட்டியின் சாக்கடை கழிவு நீர், பாலத்தின் அருகில் அமராவதி ஆற்றில் கலந்து ஆறு முழுவதும் சாக்கடை கழிவுநீராக உள்ளது. இங்குள்ள பன்றிகள் கழிவு நீரில் விழுந்து புரளுகின்றன. பின்னர் பன்றிகள் அமராவதி ஆற்றின் கரையோரமுள்ள தெருக்களின் வழியாக பள்ளபட்டி ஊருக்குள் நுழைகின்றன.

திறந்துள்ள வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மேலும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் நுழைந்து வீடுகளின் கதவுகளை முட்டுவது, தெருக்களில் அசிங்கம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன். இதனால் பள்ளபட்டி ஊர் முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்படுகின்றது.

இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் ஊர் முழுவதும் பரவும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. முக்கிமாக ஊரின் நுழைவுப்பகுதியில் பாலத்தருகே நங்காஞ்சி ஆற்றின் கரையோரம் பள்ளபட்டி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசவ வார்டுக்கு பின்புறம் ஆற்றில் சாக்கடைக் கழிவு நீர், அதில் புரண்டு விளையாடும் பன்றிகள், இதனால் உற்பத்தியாகும் கொசு மற்றும் கிருமிகளால் பிரசவமான பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்ககு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பள்ளபட்டி நங்காஞ்சி ஆற்றில் பள்ளபட்டியின் சாக்கடை கழிவு நீர் கலப்பது நீண்ட காலமாக உள்ளது. இதில் வளரும் பன்றிகள் இரவு நேரங்களில் ஊருக்குள் வந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகின்றன. ஆற்றின் கரையை ஒட்டியுள்ள அரசு மருத்துவமனையிலேயே நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் கொசுக்களால் முதியவர்கள், குழந்தைகள் காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய் பாதிப்பில் உள்ளனர். இது தொடர்பாக பல முறை கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டும் நீண்ட நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளபட்டி முழுவதும் நோய் பரப்பும் பன்றிகளை ஒழிக்க வேண்டும். சாக்கடை கழிவுகள் அமராவதி ஆற்றில் கலப்பதை தடுத்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பள்ளபட்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: