சாக்கடையில் திரியும் பன்றிகளால் மூளைக்காய்ச்சல் அபாயம்

மேலூர், பிப்.21: மேலூர் நகரில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. நகரின் எல்கைக்குட்பட்ட பகுதியில் பன்றிகள் வளர்க்க கூடாது என தடை இருந்தாலும் அதையும் மீறி பலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இவை தேங்கி உள்ள சாக்கடையில் நீந்தி வந்த நிலையில், அப்படியே குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து விடுகிறது. அங்கு வீட்டின் வெளியில் உள்ள பொருட்கள் மட்டுமல்லாது வீடுகள் திறந்திருந்தால் உள்ளே சென்று உணவு பொருட்களிலும் வாய் வைத்து விடுகிறது. குறிப்பாக 8வது வார்டான ஸ்டார் நகர், கஸ்தூரிபாய் நகர், மலம்பட்டி, வெள்ளநாதன்பட்டி, அண்ணா காலனி பகுதிகளில் பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கு காரணம் பெரும்பாலான பன்றிகளை வளர்ப்பவர்கள் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தான். நகரில் தேங்கி உள்ள குப்பைகளும், சாக்கடையும் தான் இவற்றின் புகலிடம். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பன்றிகளை நகருக்கு வெளியில் கொண்டு போக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நகரில் சுகாதார கேடு ஏற்படுவதுடன் மூளைக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மேலூர் நகராட்சி பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: