தென்பழநி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மாசி மகத் திருவிழா கோலாகலம் 25 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக் கடன்

கழுகுமலை, பிப். 20:

தென்பழநி கழுகுமலை கழுகாசலமூர்த்தி

கோயிலில் மாசி மகத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி 25 அடி நீள அலகு குத்தி பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 தமிழகத்தின் தென்பழநி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தனித்துவ மாசி மகத் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜை நடந்தது. காலை 11 மணிக்கு மேல் மதுரை, ராஜபாளையம், சிவகாசி, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களில் இருந்தும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் பெருந்திரளானோர் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாக வந்திருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 11, 14, 25 அடி நீள அலகு குத்தி, மலையைச் சுற்றி கிரிவலம் வந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 நண்பகல் 12 மணிக்கு மேல் சிறப்பு ஹோமமும், அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடந்தது. மாலை 6 மணிக்கு நடந்த கிரிவலத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.  இரவு 10 மணிக்கு பூஞ்சப்பர மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் கழுகாசலமூர்த்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ராஜபாளையம், மதுரை, சிவகாசி, வில்லிபுத்தூர் பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் செய்திருந்தனர்.

Related Stories: