குப்பை கிடங்கில் இருந்துவெளியேறும் புகை இன்னும் 2 நாள் நீடிக்கும்

ஈரோடு, பிப்.20:  வெண்டிபாளயைம் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை இன்னும் இன்னும் 2 நாள் நீடிக்கும் என மாநகராட்சி உதவி கமிஷனர் அசோக்குமார் கூறினார்.  ஈரோடு மாநகராட்சிக்கு 4 மண்டலத்திற்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால், கடந்த 3 நாட்களாக புகை வெளியேறி மாநகர் முழுவதும் பரவி வருகிறது. இதனால், காற்று மாசுபட்டு மக்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி 4ம் மண்டல உதவி கமிஷனர் அசோக்குமார் நேற்று நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் வெயிலின் தாக்கத்தால் தேங்கி உள்ள குப்பையில் இருந்து மீத்தேன் வாயு அதிகளவில் வெளிப்படும். அப்போது, தானாகவே தீ பற்றி எரியும். கடந்த 16ம் தேதி ஏற்பட்ட தீயின் போது, கிடங்கில் இருந்த போர்வெல் மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் இல்லாமல் இருந்தது. இதனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

தீ அணைந்த பிறகு புகை வெளியேறியது. இதைக் கட்டுப்படுத்த குப்பை கிடங்கில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. இதில், 3 சிப்ட்களாக பணியாளர்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், இந்த புகை இன்னும் 2 நாட்கள் வரை நீடிக்கும்.

வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் குப்பைகளை உரமாக்கி வந்த தனியார் நிறுவனத்தினர் தங்களது பணியை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றனர். இதனால், குப்பைகள் அதிகளவில் தேங்கியது. இந்த கிடங்கில் குப்பை கொட்டக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று தற்போது பயோ மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் தேங்கியுள்ள பல ஆயிரம் டன் குப்பைகளை 2 வருடத்திற்குள் முழுமையாக அழிக்கப்பட்டு உரமாக்கப்படும். இதுதவிர, தினமும் சேகராமாகும் குப்பைகளை இங்கு கொட்டாமல், அந்தந்த பகுதிகளிலேயே எம்சிசி திட்டத்தின் மூலம் பிரித்து கழிவுகள் அப்போதே உரமாக்கப்படும். இந்த திட்டத்திற்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. இருப்பினும் இதை செயல்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: