தேரோட்ட திருவிழா தேர்தலை மனதில் கொண்டு வறுமைக்கோடு பட்டியலில் அதிமுக ஆதரவாளர் பெயர்கள் மட்டும் சேர்ப்பு

 மதுரை, பிப். 20: மதுரை மாவட்டத்தில் வறுமைக்கோடு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது உண்மையெனவும், அதிமுகவினர் ஆதரவாளர்கள் பெயர் மட்டும் கணக்கெடுப்பின் போது சேர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இந்தாண்டு நிதியுதவியாக ரூ.2 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க உள்ளது. 60 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்துகிறது. ஊரகப்பகுதியில், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பராமரிக்கும் இ-மதி இணையதளத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை,எளிய மக்களின் நிலை குறித்து கணக்கெடுப்பு கடந்த 2013-14ம் ஆண்டில் நடந்தது. அதேபோன்று மாநகர், நகர் பகுதியில் 2003-04ம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்டது. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட பட்டியல் அடிப்படையில் தற்போது ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இப்பட்டியலில் மத்திய அரசின் அன்ன யோஜனா பயனாளிகள் சேர்க்கப்படவில்லை.

மதுரை மாவட்டத்தில், வறுமைக்கோடு கணக்கெடுப்பு நடந்த ஆண்டில் களப்பணியாளர்கள் முறையாக வீடு வீடாக ஆய்வு செய்யாமல், அப்போது ஆளுங்கட்சியினர் (அதிமுகவினர்) தயாரித்து கொடுத்த பெயர்களை வறுமைக் கோட்டிற்கான பட்டியலில் ஊரக வளர்ச்சித்துறையிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சேர்த்தனர். இதனால் தற்போது வெளியான வறுமைக்கோடு பட்டியலில் அதிமுகவினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பெயர்கள் மட்டுமே உள்ளது. உண்மையில் ஏழை, எளிய மக்களின் குடும்பத்தினர் பெயர் வறுமைக்கோட்டு பட்டியலில் இடம்பெரவில்லை. பட்டியல் உள்ளவர்களிடம் ரேஷன்கார்டு, வங்கி கணக்கு எண் கேட்டு வாங்குகின்றனர். பட்டியலை அதிமுகவினர் தேர்வு செய்து கொடுத்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் பல ஊர்களில் ஏழை குடும்பத்தின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, கிராமத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தினர் தங்களை இந்த பட்டியலில் சேர்க்கக்கோரி, மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

மாவட்டத்தில் அரிசி வாங்கும் மொத்த ரேஷன் கார்டு (குடும்பம்) 8 லட்சத்து 90 ஆயிரம் இதில் 2 லட்சம் கார்டுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. மீதிப்பேருக்கு இல்லை. இதுகுறித்து, சமூக ஆர்வலர் சுரேஷ் கூறுகையில்,‘வறுமைக்கோட்டிற்கான பட்டியலில் வசதிபடைத்தவர்கள் பெயர்கள் அதிகம் உள்ளது. அதிமுக கட்சிக்காரர்கள் பெயரும், அவர்களுக்கு ஓட்டுப்போடுபவர்கள் பெயர்கள் மட்டும் உள்ளது. உண்மையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் பெயர்கள் இடம்பெரவில்லை. பட்டியலை பார்க்கும் போது, தேர்தலை மனதில் கொண்டு, அதிமுகவினர் தனியாக பட்டியல் கொடுத்து, அவர்களுக்கு அரசு பணத்தை செலவு செய்வதாக உள்ளது. உண்மையான வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் பெயர்களை சேர்த்து, நிதி வழங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: