வேளாண் விளைபொருட்களை இருப்பு வைக்க மாவட்டத்தில் 18 இடங்களில் குடோன்

ஈரோடு, பிப். 15: ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் 18 இடங்களில் குடோன் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 45 ஆயிரம் மெட்ரிக் டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் மஞ்சள், நிலக்கடலை, எள், தேங்காய் பருப்பு, தேங்காய், துவரை, பருத்தி, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட 15 வகையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் 18 இடங்களில் குடோன்  அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குடோன்களில் 45 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதில், மஞ்சள் டன்னுக்கு ஒரு மாதத்திற்கு 60 ரூபாயும், மற்ற விளை பொருட்களுக்கு ஒரு மாதத்திற்கு 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Advertising
Advertising

15 நாட்கள் வரை விவசாயிகள் இந்த குடோன்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள 18 குடோன்களில் 16 குடோன் சொந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சித்தோடு மற்றும் நம்பியூர் ஆகிய பகுதிகளில் வாடகை இடத்தில் குடோன் உள்ளது. இந்த பகுதிகளில் சொந்தமாக குடோன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சித்தோடு பகுதியை பொருத்தவரை நாட்டு சர்க்கரை அதிக அளவில் விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இவற்றை இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் சொந்தமாக ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் கட்டப்பட உள்ளது.

இதேபோல, நம்பியூர் பகுதிகளில் சுமார் 36 ஆயிம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை சேமித்து வைக்கும் வகையில் நம்பியூர் பகுதியில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை அளுக்குளி பகுதியில் ஆயிரம் மெட்ரிக் டன்னும், அந்தியூரில் 25 மெட்ரிக் டன்னும், அவல்பூந்துறை, கொடுமுடி, புளியம்பட்டி, சத்தி ஆகிய பகுதிகளில் தலா 125 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கிடங்குகளில் விவசாயிகள் புளி, வரமிளகாய், கொள்ளு, துவரை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வைத்து வருகின்றனர். அளுக்குளியில் உள்ள குளிர்பதன கிடங்கில் மஞ்சளுக்கு வாடகையாக 400 ரூபாயாக இருந்தது. பின்னர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பெருந்துறை, கோபி பகுதியில் புதிதாக 2 குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஈரோடு வேளாண்மை விற்பனை குழு துணை இயக்குநர் சின்னசாமி கூறுகையில் `ஈரோடு மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை இருப்பு வைத்து நல்ல விலை வரும்போது விற்பனை செய்யும் வகையில் 18 இடங்களில் குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 16 இடங்களில் சொந்தமாகவும், 2 இடங்களில் வாடகைக்கும் உள்ளது. 6 இடங்களில் குளிர்பதன கிடங்குகளும் உள்ளது. புதிதாக 2 இடங்களில் குளிர்பதன கிடங்கும், 2 இடங்களில் சொந்தமாக குடோன்களும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். விவசாயிகள் குடோன்களில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை பொருளீட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: