தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம்

உடுமலை, பிப். 15: சுதந்திர  போராட்ட வீரர் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என சட்டசபையில்  அமைச்சர் அறிவித்துள்ளதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தினர்  வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உடுமலை  அருகே உள்ள தளியை தலைமையிடமாக கொண்டு, எத்தலப்பர் வம்சா வளியினர்  பாளையக்காரர்களாக ஆட்சி செய்தனர். ஆங்கிலேயருக்கு எதிரான போரில்,  வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவாக எத்தலப்பர் வம்சாவளியினர் செயல்பட்டனர்.  ஆங்கிலேயர் அனுப்பிய தூதுவனை தூக்கிலிட்டனர். பின்னர் நடந்த பேரில் தளி  பாளையம் அழிக்கப்பட்டது. ஆங்கிலேயேரை தூக்கிலிட்ட தூக்குமர தோட்டத்தின்  கல்வெட்டு, திருமூர்த்தி அணையில் இருந்து தளி வம்சாவளியினர் சிலைகள்,  வரலாற்று ஆய்வுகள் கண்டறியப்பட்டு வெளிவந்தது.

திருமூர்த்திமலையில்  எத்தலப்பர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள சுற்றுக்கோவில் அமைச்சர்கள் உடுமலை  ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில்,  சட்டசபையில் பேசிய மடத்துக்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ., ஜெயராமகிருஷ்ணன்,  எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு  பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ மணிமண்டபம் கட்ட ஆவன செய்யப்படும் என  உறுதி அளித்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அமைச்சரின் அறிவிப்புக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம்  வரவேற்பு தெரிவித்துள்ளது.

Related Stories: