கோவை, மார்ச் 16: கோவை லட்சுமி நகர், டி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(63). இவரது மகன் ராமசுப்பிரமணியன்(23). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகனை பார்ப்பதற்காக வெங்கடேஷ் நேற்று அதிகாலை கோவையில் இருந்து கே.எஸ்.ஆர்.பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.
ரயில் திருப்பூர் அருகே வந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் ஆம்புலன்சை வரவழைத்து, ரயில் திருப்பூர் வரவும் அவரை பரிசோதனை செய்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெங்கடேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
