நாகர்கோவில், பிப். 15: நாகர்கோவில் அருகே அழகர்கோணம் மலையில் தீவிபத்து ஏற்பட்டு பற்றி எரிகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் அடிக்கடி காட்டு தீ பிடித்து வருகிறது. நாகர்கோவில் களியங்காட்டிற்கும் இறச்சகுளத்திற்கும் இடைப்பட்ட அழகர்கோணம் மலையில் நேற்று முன்தினம் தீ பிடித்து தொடர்ந்து எரிந்து வருகிறது. காற்று வேகமாக வீசி வருவதால் தீயும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மலை முழுவதும் கரும் புகையாக காட்சி அளிக்கிறது. காற்றின் வேகம் குறையும்போது தீயின் வேகமும் குறைகிறது. மலையில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் 2 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காற்றுவீசுவதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்த மலையில் வனவிலங்குகள் இல்லை. ஆனால் மரங்கள், மூலிகைகள் அதிக அளவு உள்ளது. அவைகள் இந்த காட்டு தீயால் கருகி வருகிறது.