சிவகாசியில் 2 மாதத்தில் தாமிரபரணி குடிநீர்

சிவகாசி, பிப். 13: சிவகாசி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில், குழாய் பதிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. சிவகாசி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வெம்பக்கோட்டை அணை மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது.

குடிநீர் பற்றாக்குறை காரணமாக தற்போது நகராட்சியில் 7 நாட்களுக்குஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக தீர்க்க ரூ.170 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் நெல்லை மாவட்டம் பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு குடிநீர் எடுத்து வருப்படுகிறது. சிவகாசி நகரில் மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு நகராட்சி பகுதி மக்களுக்கு தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிவகாசி நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. சிவகாசியில் வாட்டர்டேங்க் அருகில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சிவகாசி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அம்பேத்கர் சிலை பின்புறம் உள்ள கிருதுமால் ஓடையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தாமிரபரணி நீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்க படவுள்ளது. இதன்மூலம் நகராட்சி மக்களுக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும்’ என்றார்.

Related Stories: