விசைத்தறி தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம் ஆர்ஐ அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், ஜன.31: கூலி உயர்வு வழங்காததை கண்டித்து, பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் 3வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வு வழங்கக்கோரி, கடந்த 20 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வசந்தநகர், அண்ணாநகர், ஆயக்காட்டூர், காவேரி, அம்மன்நகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 150 விசைத்தறி கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், கடந்த 28ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று (வியாழக்கிழமை)மாலை பேச்சுவார்த்தை நடத்த, ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 3வது நாளாக, பள்ளிபாளையம் ஆவாரங்காடு எம்ஜிஆர் சிலை முன்பு, விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய விசைத்தறி தொழிலாளர்கள் சங்க தலைவர் அசன் தலைமையில் நடந்த போராட்டத்தில், மாவட்ட தலைவர் அசோகன், துணைத்தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர். கடுமையான விலைவாசியை கருத்தில் கொண்டு, விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதம் கூலி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று காலை 10.30 மணிக்கு பள்ளிபாளையம் ஆர்ஐ அலுவலகம் முன்பு, விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், குழந்தைகளுடன் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Stories: