காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம், ஜன.29:  காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர்  பா.போஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை தாளாளர் அரங்கநாதன், தலைவர் மோகனரங்கன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னைப் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் முருகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: கிராமப்புற மக்களும்  கல்வியில் சிறந்திட வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஏற்படுத்தப்பட்டதே இக்கல்வி நிறுவனம்.

பணம் மட்டுமே ஒரு நோக்கமாகக் கொள்ளாமல் கல்விதான் வாழ்க்கை என்ற நோக்கத்தோடு காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிப்பெற  முடியும் . முயற்சியை ஒரு போதும் கைவிடக் கூடாது. கல்வி என்பது கற்பதற்கு மட்டுமின்றி நம்முடைய சிந்தனையை வளர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் கல்வி ஒரு  வழிகாட்டியாகத் திகழ்கிறது. பட்டம் பெற்றதோடு நின்றுவிடாமல் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சமுதாயத்தில் உயர்ந்திட வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் 452 மாணவ, மாணவிகளுக்கு  பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரி துணை முதல்வர்  பிரகாஷ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட ஏராளமானோர்  கலந்துகொண்டனர்.

Related Stories: