ரஷ்யா கடலில் கப்பல்களில் தீ பிடித்தது குமரியை சேர்ந்த மாலுமி நடுக்கடலில் மாயமானார்

நாகர்கோவில், ஜன.25: ரஷ்யா - கிரிமியா இடையே நடுக்கடலில் கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மாலுமி மாயமானார்.

ரஷ்யா-கிரிமியா இடையே உள்ள கெர்ச் ஜலசந்தி பகுதியில் 2 சரக்கு கப்பல்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். சிரியாவிற்கு எரிபொருள் ஏற்றி கொண்டு சென்ற இந்த இரண்டு கப்பல்கள், கடலில் வைத்து எரிபொருள் பரிமாறியபோது, மோசமான வானிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதில் பயணித்த 32 பேரில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் செபாஸ்டியன் பிரிட்டோ பிரீஸ்லின் சகாயராஜ், ஆனந்தசேகர் அவினாஷ், சித்தார்த் மெஹர், நீரஜ்சிங், ரிஷிகேஷ் ராஜூ சக்பால், அக்ஷய பபின்ஜாதவ் ஆகியோர் மாயமாகியுள்ளனர். இவர்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதித்தபோது மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களில் மாலுமியான செபாஸ்டியன் பிரிட்டோ பிரீஸ்லின் சகாயராஜ் குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புத்தன்துறையை சேர்ந்தவர் ஆவார். மாயமான மகன் தொடர்பான தகவல்கள் கிடைக்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.இந்த விபத்தில் சரவணன் நாகராஜன், வினால்குமார் பரத்பாய் தண்டேல், கரண்குமார் ஹரிபாய் தண்டேல், விக்ரம்சிங், விசால் தோட், ராஜ தேவ்நாராயணன் பாணிகிராபி ஆகியோர் இறந்துள்ளனர். மேலும் ஆசிஷ் அசோக் நாயர், ஹரீஷ் ஜோகி, சச்சின்சிங், கமலேஷ்பாய் கோபால்பாய் தண்டேல் ஆகிய 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச் சகம் உறுதி செய்துள்ளது.

இறந்தவர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர். காணாமல் போன 10 பேரிலும் 6 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்டவர்கள் கேர்ச் சிட்டி மருத்துவமனையில் உள்ளனர். அவர்களின் நிலை திருப்திகரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துருக்கி கம்பெனிக்கு சொந்தமான இரு கப்பல்களும் டான்சானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த வேளையில் சம்பவம் நடந்துள்ளது. சிரியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் அனுப்புவதற்கு ஐக்கியநாடுகளால் தடைவிதிக்கப்பட்டவை இந்த இரண்டு கப்பல்கள் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: