விவசாயி வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது: கூட்டாளி இருவரும் சிக்கினர் ; 40 சவரன் பறிமுதல்

பெரும்புதூர், ஜன.24: விவசாயி வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடித்த 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களது கூட்டாளிகளும் சிக்கினர். பெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த தேவேரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (58). விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வேளாண்துறையில் வேலை பார்க்கிறார். இளையமகன் திகார் சிறையில் காவலராக வேலை பார்க்கிறார்.கடந்த நவம்பர் 30ம் தேதி காலை கோவிந்தராஜன், மனைவியுடன் நூறு நாள் திட்ட வேலைக்கு சென்றார். மூத்தமகன் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து கோவிந்தராஜன், மதியம் 2 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து ₹1 லட்சம், 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. புகாரின்படி ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். மேலும், ஏஎஸ்பி ராஜேஷ்கண்ணா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் எஸ்ஐ சங்கர், போலீஸ்காரர்கள் ராஜேஷ், சரவணன், அருள்நேசன், குமரேசன், சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்துமர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனா்.

இந்நிலையில், ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே 2 பேர், நேற்று முன்தினம் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தனர். போலீசார், அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால், சந்கேதமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். மாங்காடு அடுத்த கொழுமுனிவாக்கத்தை சேர்ந்த பல்லு விக்கி (எ) விக்னேஷ் (21), சென்னை நொச்சி குப்பத்தை சேர்ந்த சுரேந்திரன் (20) என தெரிந்தது. மேலும் விசாரணையில், தேவேரியம்பாக்கம் கிராமத்தில் கோவிந்தராஜன் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து, செனாய் நகரை சேர்ந்த வினோத்குமார் (19), திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பழவேலி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), ஆகியோரிடம் கொடுத்தது தெரிந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்படி வினோத்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனா். அவர்களிடம் இருந்து 40 சவரன் நகை, ஒரு செல்போன், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Related Stories: