தெப்பத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

மதுரை, ஜன.22: மதுரையில் தெப்பத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.  மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா ஜன.10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சித்திரை வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு காட்சி தந்தனர். முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதற்காக நேற்று அதிகாலை மீனாட்சியம்மன், சுவாமி, பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் வந்தடைந்தனர். அங்கு அலங்கரித்த தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அலங்கரித்த தெப்பம் காலை 10 மணி துவங்கி அடுத்தடுத்து இருமுறை சேவார்த்திகளால் வடம் பிடித்து இழுக்க வலம் வந்தது. ஆயிரக்கணக்கானோர் தெப்பக்குளத்தைச் சுற்றி நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளிய அம்மன், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மீண்டும் இரவு 8 மணிக்கு மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்பம் ஒருமுறை சுற்றி வந்தது. அம்மன், சுவாமி தெப்பத்தில் நேற்றிரவு கரைக்கு வந்தனர். சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு, முக்தீஸ்வரர் கோயில் முன்பிருந்து குதிரை வாகனத்தில் கிளம்பி மீனாட்சி கோயிலைச் சேர்ந்தனர். அம்மன், சுவாமி மாரியம்மன் தெப்பக்குளத்தில் இருந்து நேற்றிரவு திரும்பும் வரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து.கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.

Related Stories: