ஊரப்பாக்கம் ஊராட்சியில் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கவில்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

கூடுவாஞ்சேரி, ஜன. 22: ஊரப்பாக்கம் ஊராட்சியில் பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலை வழங்கவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர்.

ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலை வழங்கவில்லை என ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘’ஊரப்பாக்கம் ஊராட்சியில் மட்டும் 8 இடங்களில் ரேஷன் கடை உள்ளது. இதில் 10,090 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 4600 வேட்டி, சேலை மட்டுமே வந்துள்ளது. மீதமுள்ள 5490 பேருக்கு பற்றாக்குறையாக உள்ளதால் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலை இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோல் விதவை, முதியோருக்கு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலையும் சரிவர வழங்கப்படவில்லை.

ஒரு சில ஊராட்சிகளில் பாதிக்கு பாதியளவில் வந்த வேட்டி, சேலை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மீதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வந்த பிறகு வழங்கப்படும் என்று ரேஷன் கடைகாரர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ரேஷன் கடைகாரர்களிடம் கேட்டதற்கு, நாங்கள் என்ன செய்வோம். வருவாய்த்துறையினர் எங்களிடம் கொடுத்ததைத்தான் எங்களால் கொடுக்க முடியும்’’ என்றனர்.  இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘’பாதிக்கு பாதிதான் தற்போது வந்துள்ளது. அதைத்தான் ரேஷன் கடைகாரர்களிடம் கொடுத்துள்ளோம். மீதி வந்த பிறகு தான் கொடுப்போம்’’ என்றனர்.

Related Stories: