மேலூர் அருகே மதநல்லிணக்க மாட்டுப் பொங்கல் விழா

மேலூர், ஜன. 18: மேலூர் அருகே அனைத்து ஜாதியினர் மட்டுமல்லாது மதத்தினரும் கலந்து கொண்ட மதநல்லிணக்க மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலை 7 அம்பலகாரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இக்கோயிலின் பூசாரியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே பரம்பரையாக பூஜைகள் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று இவ்வூரை சேர்ந்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு ‘ஜவுளி’ எடுத்து வருவது வழக்கம்.அனைத்து சமுதாய மக்களிடமும் வசூல் செய்த பணத்தில் கோயில் மாட்டிற்கு கட்டுவதற்காக வேஷ்டிகள், துண்டுகள் அந்த ஜவுளி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். பெட்டி முழுவதும் செவ்வந்தி பூக்கள் சுற்றி, அருள் வந்து சாமியாட்டத்துடன் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த அப்துல்ரஜாக் என்பவர் அப்பெட்டியை ஊர்வலமாக ஊர் மந்தைக்கு தூக்கி வந்தார்.

பின் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் கோயில் மாட்டிற்கு அந்த துண்டுகளை கட்டினார். இதனை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த இளைஞர்கள் முன்னிலையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மாட்டு பொங்கல் அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சி போல், சித்திரை முதல் நாளில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்ளும் ‘வெற்றிலை பாக்கு’ கொடுத்து அனைத்து சமுதாயத்தினருக்கும் மரியாதை செலுத்தும் விழா இவ்வூரில் நடைபெறுவது வழக்கம்.

இவ்வூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கூறியதாவது : தொன்று தொட்டே இவ்வூரில் நடைமுறையில் உள்ளது. முஸ்லிம் மதத்தை சேர்ந்த தரகன் வகையறாவினர் ‘ஜவுளி‘யை தலையில் சுமந்து வருவார்கள். 7 அம்பலகாரர்கள் தலைமையில் 18பட்டியை சேர்ந்தவர்கள் முன்னிலையில் வீரகாளியம்மன் கோயிலில் கரைப்படி தீர்த்தம் வழங்கப்பட்ட பிறகு மஞ்சுவிரட்டு நடைபெறும். இக்கோயிலுக்கு முன்னாள் அமைச்சர் கக்கனின் வாரிசுகளே இன்றளவும் பூசாரியாக உள்ளனர் என்று கூறினார்.

அதிக ஜாதி மத மோதல்கள் உள்ள இந்த காலக்கட்டத்தில் அம்பலகாரர்களுக்கு சொந்தமான கோயிலில், தாழ்த்தப்பட்டவர் ஒருவர் பூசாரியாக உள்ளார். முஸ்லிம் பிரமுகரால் கொண்டு வரப்படும் ஜவுளி, இந்து மத சடங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து ஊர்களிலும் இது போன்று பின்பற்றப்படும் நிலை ஏற்படுமானால் ஜாதி, மத மோதல்களே ஏற்படாது என்பது மட்டும் உண்மை.

Related Stories: