மதுரை கூர்நோக்கு இல்லம் ஏப்.1 முதல் செயல்பட வேண்டும் சமூக நலத்துறை செயலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, ஜன. 18: மதுரை கூர்நோக்கு இல்லம் ஏப்.1 முதல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக நலத்துறை செயலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை அனுப்பானடியை சேர்ந்த எஸ்.ரவிச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை காமராஜர் சாலையில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்தாண்டு டிசம்பரில் மூடப்பட்டது. இங்கிருந்த மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறார்கள் 125 கி.மீ தொலைவில் உள்ள திருச்சி கூர்நோக்கு இல்லத்திற்கும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட சிறார்கள் 160 கி.மீ தொலைவில் உள்ள நெல்லை கூர்நோக்கு இல்லத்திற்கும் மாற்றப்பட்டனர். புதிய கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள் கடந்த 6 மாதத்திற்கு முன்பே முடிந்தது. ஆனால் இன்னமும் கூர்நோக்கு இல்லம் திறக்கப்படவில்லை. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பார்க்க வெகுதூரம் அலைய வேண்டியுள்ளது. மிகுந்த பண செலவும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். காவல் துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தை விரைவில் திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுரை கூர்நோக்கு இல்லம் ஏப்.1 முதல் செயல்பட தேவையான நிதி மற்றும் போதுமான பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகளை சமூக நலத்துறை செயலர் தரப்பில் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றுவதில், இனி எந்த கால அவகாசமும் வழங்கப்படாது என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: