குன்றத்தூர் அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 600 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது : ஒருவருக்கு வலை

குன்றத்தூர், ஜன.18: .  குன்றத்தூர்- திருபெரும்புதூர் சாலையில்  நந்தம்பாக்கம் அருகே குன்றத்தூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை  போலீசார் மடக்கி  விசாரணை செய்தபோது, அந்த வண்டியில் இருந்து வாலிபர் ஒருவர் இறங்கி ஓட முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக   அந்த வழியே வந்த வண்டி மோதியதில் அந்த வாலிபர் காயம் அடைந்தார்.அந்த நபரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த ஆட்டோ டிரைவரிடம்  விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். இந்த அந்த ஆட்டோவில் தடை செய்யப்பட்ட போதைப்  பொருளான குட்கா மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, அவர் மணலியை சேர்ந்த சுரேஷ்(32) என்பதும், மணலியில் கண்டெய்னரில் குட்கா போதைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து,  அதனை  தனித் தனியாகப் பிரித்து லோடு ஆட்டோக்களில் ஏற்றிக்கொண்டு சென்னை புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த வண்டியில் இருந்த 600 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சுரேசை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் காயம் அடைந்து மருத்துவமனைக்கு சென்ற மனோ(30) என்ற நபர் போலீசாருக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டார். அந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: