மானாமதுரை, ஜன.11: மானாமதுரையில் சிவகங்கை மெயின் ரோட்டில் உள்ள சிப்காட் ரயில்வே கேட்டின் பாகங்கள் கழன்று விழுந்தும் காங்கிரீட் தடுப்புகள் சேதமடைந்தும் உள்ளதால், ரயில் வரும்போது பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மானாமதுரை சிப்காட் மெயின் ரோட்டில் சிவகங்கை செல்லும் வழியில் ரயில்பாதை குறுக்கிடுவதால், மானாமதுரை துணை மின்நிலையம் அருகே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மானாமதுரை வழியாக தினமும் 14 ரயில்களும், வாராந்திர ரயில்கள், இந்திய சுற்றுலா கழக சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் என ஏராளமான ரயில்கள் செல்கின்றன. இதனால் தினமும் 20 முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுகிறது. ரயில் வரும் நேரங்களில் 10 நிமிடத்திற்கு மேல் ஆகும்போது இந்த கேட்டில் காத்து நிற்கும் பாதசாரிகள் பலர் ரயில்பாதையை துணிச்சலாக கடந்து செல்கின்றனர். ரயில்வே கேட் பாதுகாப்பிற்கு போடப்பட்ட சிமென்ட் காங்கிரீட் தடுப்புகள் சேதமடைந்தும், ரயில்வே கேட்டின் ஒரு பகுதி துண்டாகி உள்ளதால் தண்டவாளத்தை பாதசாரிகள் சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த விஜயா(30) ரயில்வே கேட்டை கடந்து சென்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.