திருத்தங்கல் நகராட்சியில் ரூ.10 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

சிவகாசி, டிச. 21: திருத்தங்கல் நகராட்சியில் ரூ.10 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, ‘ஒரு சாதாரண முதலமைச்சரை தமிழகம் பெற்றுள்ளது. மக்களை தேடி அரசு என்ற வகையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு செயலாற்றி வருகிறது. திருத்தங்கல் நகராட்சியில் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் செய்து முடித்துள்ளோம். திருத்தங்கல் மெயின்ரோடு அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. நகராட்சியில் ரூ.5 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிலுக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கும் நான் பக்கபலமாக இருந்து செயலாற்றுவேன்.

உச்சநீதிமன்றத்தில் பசுமை பட்டாசு குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பட்டாசு ஆலை அதிபர்களுடன் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தோம். பட்டாசு ஆலைகளை திறக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் என்றும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் கலெக்டா் சிவஞானம், நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன், அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜவர்மன் உட்பட அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: