மணஞ்சேரி அரசு மருத்துவமனையில் அதிகளவு மயக்க மருந்தால் கர்ப்பிணி பரிதாப மரணம்

குன்றத்தூர், டிச. 19: குன்றத்தூர், தெற்கு மலையம்பாக்கத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால் இறந்ததாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூர் அடுத்த தெற்குமலையம்பாக்கம், என்.எஸ்.கே நகர் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது மனைவி ராஜகுமாரி (23). தம்பதிக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜகுமாரி தனது கணவர் வீட்டின் அருகில் உள்ள மணஞ்சேரி அரசு மருத்துவமனையில் தினமும் பரிசோதனை செய்து வந்தார்.  நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை உறவினர்கள் மீட்டு மணஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை தலை புரண்டு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்துதான் பிரசவம் பார்க்க முடியும் என்று கூறினர். மேலும், அறுவை சிகிச்சை செய்து, பிரசவம் பார்ப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர், திடீரென அவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமானதால் ராஜகுமாரியை மீட்டு மேல்சிகிச்சைக்காக எழும்பூரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அவசரப்படுத்தி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் செல்லும் வழியில் ராஜகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராஜகுமாரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே ராஜகுமாரி கணவன் நித்தியானந்தம் குன்றத்தூர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

என்னுடைய மனைவி ராஜகுமாரியின் இறப்பிற்கு மணஞ்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்தான் காரணம். அவர்கள்தான் பிரசவத்திற்காக கொடுக்கப்படும் மயக்க மருந்து அளவுக்கு அதிகம் கொடுத்துள்ளனர். அதனாலேயே ராஜகுமாரி இறந்துள்ளார். பிறகு எதற்காக காலையில் இருந்து இரவு வரையில் வீணாக காக்க வைக்க வேண்டும். எனவே ராஜகுமாரியின் இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: