குமரி மாவட்டத்தில் 75 அரசு உயர்நிலை பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் விஜயகுமார் எம்.பி. தகவல்

நாகர்கோவில், டிச.16:  விஜயகுமார் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :குமரி மாவட்ட மாணவர்களின் திறன்களை வளர்க்கும் விதத்தில் மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் முதற்கட்டமாக ஸ்மார்ட் வகுப்பு ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 24 அரசு மேல்நிலை பள்ளிகளில் எனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 அரசு மேல்நிலை பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கல்வித்துறை மூலமும், மாவட்ட நிர்வாகம் மூலமும் நிதி ஒதுக்கீடு செய்து ஸ்மார்ட் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள 75 அரசு உயர்நிலை பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தான் அதிகளவில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டு தன்னிறைவு பெற்றுள்ளது.  

அரசு மேல்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பதில் குமரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்துள்ளது. இதனால் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற குமரி மாவட்டம் கல்வித்துறையில் டிஜிட்டல் யுககல்வி கற்றல் முறையில் ஒரு மைல்கல்லாக திகழும் என்பது நிச்சயம். ஸ்மார்ட் வகுப்பறைகள்  திறப்பதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளை முழுமையாக பயன்படுத்தி  தங்களது தனித்திறமைகளை வளர்த்து மனிதவள மேம்பாட்டில் வளர்ச்சி அடைய வேண்டும். கல்விதுறையில் புரட்சி காணும் ஸ்மார்ட் வகுப்பறைகள் எனும் அரிய கற்றல் முயற்சிக்கு அனைத்து பள்ளிகளின் பெற்றோர், ஆசிரியர் கழகமும், கல்விக்குழுக்களும், பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி கருதி துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: