சோளிங்கர், டிச.12: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலில் தினகரன் செய்தி எதிரோலியால் 9.5 கோடி மதிப்பீட்டிலான ரோப்கார் அமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சோளிங்கரில் 108 வைனவ திவ்யதளங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ஒரே பாறையால் ஆன 750 அடி உயரமுள்ள மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது. சுவாமி தரிசனம் செய்ய 1,305 படிகள் ஏறி செல்ல வேண்டும். இதன் அருகே 350 அடி உயரமுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மலைமீது ஏறிச்சென்று சுவாமியை தரிசிக்க சிரமமாக உள்ளதால் எளிதில் சுவாமியை தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைக்க பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு மறுமதிப்பீட்டில் 9.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரோப் கார் அமைக்கும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கான கட்டுமான பணியில் டெல்லி ரைட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். 75 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் ரோப்கார் அமைக்கும் பிரதான ஒப்பந்ததாரர், கூடுதல் பணிகள் செய்த துணை ஒப்பந்ததாரருக்கு 90 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து துணை ஒப்பந்ததாரர், ரோப்கார் அமைப்பதற்கான கட்டுமான பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தொழிலாளர்களை அழைத்து சென்றுவிட்டார். இதனால் ரோப்கார் அமைக்கும் பணி முற்றிலுமாக முடங்கியது.
இதனால், ரோப்கார் திட்டம் எப்போது நிறைவேறுமோ என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று படத்துடன் கூடிய விரிவான செய்தி கடந்த 6ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக ரோப்கார் அமைக்கும் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.