சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த டெய்லர் போக்சோவில் கைது காட்பாடி அருகே பரபரப்பு சீருடை அளவு எடுப்பதுபோல் நடித்து

வேலூர், டிச.18: காட்பாடி அருகே சிறுமிக்கு சீருடை அளவு எடுப்பதுபோல் நடித்து பாலியல் தொந்தரவு கொடுத்த டெய்லரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 4வது படிக்கும் 9வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு பள்ளி சீருடையை அருகே இருந்த பார்த்திபன் (57) என்ற டெய்லர் தைத்துக் கொடுத்துள்ளார். சீருடை மிகவும் பெரியதாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதை மீண்டும் சரியான அளவில் தைப்பதற்காக பார்த்திபனின் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். அப்போது அளவு எடுப்பதுபோல் நடித்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. டெய்லரின் வீட்டுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை என்று சிறுமியின் பாட்டி அங்கு சென்றார். அப்போது டெய்லர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பாட்டியிடம் சிறுமி அழுதவாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.

Related Stories: