வேலூர், டிச.18: வடக்கு கிழக்கு ரயில்வே கோரக்பூர் மண்டலம் கான்டபாரா ரயில் நிலையம் மறுசீரமைப்புப்பணிகள் காரணமாக திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக செல்லும் 3 ரயில் சேவைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, மேற்கு வங்க மாநிலம் புரூலியாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அட்ரா, பன்குரா, பிஷ்ணுபூர், மிண்டாபூர், நிம்பூரா, பாலேஷ்வர், கட்டாக், புவனேஸ்வர், விஜயநகரம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, ஓங்கோல், நெல்லூர், கூடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை என 36 ரயில் நிலையங்களில் நின்று 2வது நாள் அதிகாலை 3.55 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் வண்டி எண் 22605 புரூலியா-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் வரும் 22ம் தேதி மட்டும் காலை 11 மணியளவில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழுப்புரத்தில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக 19 ரயில் நிலையங்களில் நின்று மறுநாள் 6.35 மணிக்கு கோரக்பூர் சென்றடையும் வண்டி எண் 22604 விழுப்புரம்- கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 23ம் தேதி மட்டும் மாலை 3.05 மணிக்கு 240 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கிறது. புதுச்சேரியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா வழியாக 17 ரயில் நிலையங்களில் நின்று ஹவுரா வரை செல்லும் வண்டி எண் 18868 புதுச்சேரி- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 24ம் தேதி ஒரு நாள் மட்டும் 60 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
