திருமங்கலம் விரிவாக்க கால்வாய் மூலம் முதலைக்குளம் பெரிய கண்மாய்க்கு கூடுதல் தண்ணீர் விட வேண்டும்

மதுரை, டிச. 11: முதலைக்குளம் பெரிய கண்மாய்க்கு, திருமங்கலம் விரிவாக்க கால்வாய் மூலம் கூடுதல் தண்ணீர் விட ஆவண செய்யும்படி நடுமுதலைக்குளம் கிராம மக்கள் கலெக்டர் நடராஜனிடம் கோரிக்கை வைத்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது முதலைக்குளம். இவ்வூரில் உள்ள எட்டூர் கிராம முன்னேற்ற சங்கத்தலைவர் ராமன் தலைமையில் பொதுமக்கள் நேற்று கலெக்டர் நடராஜனிடம் மனு கொடுத்தனர். இதில், `` முதலைக்குளம் பெரிய கண்மாயில் சமீபத்தில் பெய்த கனமழையாலும், விரிவாக்க கால்வாய் மூலமும் கிடைத்த தண்ணீரும் சேர்ந்து 50 சதவீதம் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் பாசன நிலங்களுக்கு கண்மாய் தண்ணீர் ஏறவே இல்லை. இதற்குள் கண்மாய் தண்ணீர் மூன்று மடைகளிலும் வெளியேறுவதால், தண்ணீர் 20 நாட்களுக்குத்தான் இருப்பு உள்ளது.

விவசாயத்திற்கான கண்மாய் தண்ணீர் வற்றி வருவதால், விவசாயிகள் அச்சமும், கவலையும் அடைந்திருக்கின்றனர். எனவே திருமங்கலம் விரிவாக்க கால்வாய் மூலம் முதலைக்குளம் பெரிய கண்மாய்க்கு கூடுதல் தண்ணீர் விடுவதற்கு ஆவண செய்ய வேண்டுகிறோம்’’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: