கொள்ளிடம், டிச.4: கொள்ளிடம அருகே புத்தூர் நெடுஞ்சாலையில் தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் விலங்கினங்களின் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் கடைத் தெருவையொட்டி புத்தூரிலிருந்து திருமயிலாடி செல்லும் நெடுஞ்சாலையில், புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளும் இறந்த விலங்கினங்கள் மற்றும் அழுகிய காய், கறிகள் உள்ளிட்ட குப்பைகள் தினந்தோறும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. வெயில் நேரத்தில், காய்ந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் பறந்து சென்று அருகே உள்ள வியாபாரக் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு சென்று தேங்குவதால், குடியிருப்புகளைச் சுற்றி குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இறந்த நாய் போன்ற விலங்கினங்களை குப்பையுடன் சேர்ந்து கொட்டும் போது துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
