கஜா புயல் இழப்பீடு ரூ.1 லட்சம் கோடி வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம் திருச்சியில் பரபரப்பு

திருச்சி, நவ.27: கஜா புயலால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் கோடி வழங்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று நடந்தது.  கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் த.மா.கா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கஜா புயலில் சேதமான வாழைத்தார், வாழை மரங்களை கையில் எடுத்துக்கொண்டு கோஷமிட்டபடி கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்தனர். போலீசார் அவர்களை  தடுத்து நிறுத்தினர். வாழை மரங்களோடு உள்ளே செல்லக்கூடாது என்பதால், விவசாயிகள் அங்கேயே  படுத்துக் கொண்டு கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். நீண்ட போராட்டத்துக்கு பின் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் மரங்களை தூக்கிப்போட்டுவிட்டு உள்ளே சென்று கலெக்டர் ராஜாமணியிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், ‘கஜா புயலால் வாழை, நெல், தென்னை, பலா, புளி, வேம்பு என பல்வேறு மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளன. ஆனால் அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகை மிகவும் குறைவாக உள்ளது. வாழை பயிர் செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் ஆகும். ஆனால், இழப்பீடே ரூ.5,400 தான் தருவதாக கூறி உள்ளது. அதேபோல நெல், சவுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 என கூறி உள்ளனர்.

சேலத்தில் 8 வழிச்சாலை அமைக்க ஒரு தென்னை மரத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை தருவதாக கூறினர். ஆனால், கஜா புயலால் வீழ்ந்த தென்னைகளுக்கு ரூ.1,100 மட்டும் தருவதாக கூறுகின்றனர். இது மிகவும் குறைவு. கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியபோது பேரிடர் இழப்பாக ரூ.39,750 கோடி தமிழகம் கேட்டது. ஆனால், மத்திய அரசோ ரூ.1,700 கோடி தான் தந்தது. தற்போது கஜா புயலால் டெல்டா விவசாயிகள் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனால், ரூ.15 ஆயிரம் கோடி மட்டும் தமிழக அரசு இழப்பீடாக கேட்டுள்ளது. மத்திய அரசு எவ்வளவு தரப்போகிறது என தெரிவியவில்லை. இவ்வளவு பெரிய பேரிடர் நேர்ந்துள்ளது. எனவே இதை தேசிய பேரிடராக அறிவித்து ரூ.1 லட்சம் கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: