தாய்மொழியை புறந்தள்ளினால் சமுதாய வளர்ச்சி இருக்காது

கோவை, நவ.21: தாய்மொழியை புறந்தள்ளினால் சமுதாய வளர்ச்சி இருக்காது என கோவையில் நடந்த தமிழ் ஆட்சி மொழி கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வெங்கடேசன் தெரிவித்தார்.  கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் பள்ளியில் தமிழ் ஆட்சி மொழி கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன் பேசியதாவது: நாட்டின் செல்வமாக கருதப்படும் மொழியானது பண்பாட்டின் அடையாளமாக உள்ளது. தாய்மொழியில் போதுமான அறிவு பெறவில்லை என்றால், அவர்களின் திறமை முழுமையானதாக கருதப்படாது.

 தாய்மொழி சிந்தனை தான் பிறமொழியில் மொழி பெயர்த்து கொடுக்க முடியும். சமுதாயம் சிறந்து விளங்க மொழி சிறப்படைய வேண்டும். தாய்மொழியை புறந்தள்ளினால் சமுதாய வளர்ச்சி இருக்காது. உலகளவில் பழமையான வாய்ந்த மொழியாக தமிழ் மொழி உள்ளது. 1956ல் உருவாக்கப்பட்ட தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி, அரசு அலுவலக பதிவேடுகள், கோப்புகள், கடிதங்கள், அலுவலக ஆணைகள், முத்திரைகள், பெயர்பலகைகள் தமிழில் இருத்தல் வேண்டும். மத்திய அரசு, பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கலாம். ஆட்சிமொழி சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 90 சதவீதம் ஆட்சிமொழி திட்டச்செயலாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 நிகழ்ச்சியின் போது, ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளருக்கு கேயடம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட கலெக்டர் ஹரிகரன், தமிழ்வளர்ச்சி துணை இயக்குனர் அன்பு செழியன், அகரமுதலித் திட்ட இயக்குனர்(ஓய்வு) கோ.செழியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: