சாலையை புதுப்பித்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மதுரை, நவ. 20: நான்கு கி.மீ தூரம் நடந்து செல்வதால், கிராமத்து சாலையை புதுப்பித்து தரக்கோரி அரிட்டாபட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரையில் இருந்து அரிட்டாபட்டி கிராமத்திற்கு நரசிங்கம்பட்டி வழியாக பஸ் போக்குவரத்து உண்டு. 1960 முதல் இந்த போக்குவரத்துக்கு என ரோடு வசதி உள்ளது. இந்த ரோடு 1.5 கி.மீ தூரம் பெருமாள் மலை வழியாக செல்கிறது. மலைப்பகுதி ரோடு, வனத்துறைக்கு சொந்தமானதாகும். ரோடு முற்றிலும் சேதமடைந்ததால், தற்போது ரோட்டை அகலப்படுத்தி, புதிதாக ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதில் பெருமாள் மலைப் பகுதியில் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்றால், வனத்துறைக்கு ரூ.9 லட்சத்தை நெடுஞ்சாலைத் துறையினர் செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர் இதுவரை பணம் செலுத்தவில்லை. 1.5 கி.மீ தூரத்திற்கு ரோடு போட வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் பணி நிறுத்தப்பட்டது.

மதுரையில் இருந்து அரிட்டாபட்டி செல்லும் அரசு பஸ்கள் நரசிங்கம்பட்டியில் நின்று விடுகிறது. மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து 4 கி.மீ தூரம் நடந்து அரிட்டாபட்டி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக கிராம மக்கள் நெடுஞ்சாலை துறையிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால்  இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு சாலையை புதுப்பித்து கொடுக்கும்படி கோரி கலெக்டர் நடராஜனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related Stories: