சமயநல்லூரில் மூடியே கிடக்கும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வாடிப்பட்டி, நவ. 20: சமயநல்லூரில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட அரசு நவீன உடற்பயிற்சி கூடம் பயனற்ற நிலையில் பல ஆண்டுகளாக மூடிகிடக்கிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதோடு பயிற்சி கூடத்தில் உள்ள பொருட்கள் திருடுபோவதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்டது சமயநல்லூர் ஊராட்சி. மதுரைக்கு அருகே வளர்ந்து வரும் நகர் பகுதியான இங்கு பேருந்து நிறுத்தம் அருகே இளைஞர்கள் நலனுக்காக அரசின் சார்பில் நவீன உடற்பயிற்சி கூடம் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த உடற்பயிற்சி கூடத்தை சமயநல்லூர் ஊராட்சி நிர்வாகமே பராமரித்து வந்தது. இக்கூடத்தில் ஏராளமான இளைஞர்கள் இலவசமாக தனியார் உடற்பயிற்சி கூடத்திற்கு இணையான கருவிகள் மூலம் (ஜிம்) உடற்பயிற்சி செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடற்பயிற்சிக் கூடம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விட்டது. உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உடற்பயிற்சி கருவிகள் அனைத்தும் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஏனைய உடற்பயிற்சி சாதனங்கள் திருடப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இனியாவது மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு பயனற்ற நிலையில் கிடக்கும் உடற்பயிற்சிக் கூடத்தை சீரமைத்து இளைஞர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து சமயநல்லூர் உமா மகேஸ்வரன் கூறுகையில், சமயநல்லூரில் இளைஞர்களின் நலன் கருதி உடற்பயிற்சி கூடம் அரசு மூலம் திறக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் அதனை முறையாக பராமரிக்காமல் பல ஆண்டுகளாக பூட்டியே வைத்துள்ளது. மேலும் பயிற்சி கூடத்தில் இருந்த பொருட்களும் நிறைய காணாமல் போய் விட்டன. இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சமயநல்லூர் ஊராட்சி நிர்வாகமும் சரி மேற்கு ஒன்றிய அதிகாரிகளும் சரி இதனை கண்டுகொள்ளவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் பயனற்று கிடக்கும் உடற்பயிற்சி கூடத்தை இளைஞர்கள் நலன் கருதி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றார்.

Related Stories: