அணைக்கட்டு தாலுகாவில் கஜா புயலால் சேதமான வாழை மரங்களுக்கு இழப்பீடு விவசாயிகள் கோரிக்கை

அணைக்கட்டு, நவ. 19: அணைக்கட்டு தாலுகாவில் கஜா புயலால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் தனது நிலத்தில் 300 வாழை மரங்களை நட்டு வளர்த்து வந்தார். இதே போல் அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி ராகினியும் 500 வாழை மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தனர். 800 வாழை மரங்களும் குலை தள்ளி அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி கஜாபுயல் கரையை கடக்கும் போது வீசிய பலத்த காற்றால் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமானது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அணைக்கட்டு தோட்டக்கலை அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் நேற்று முன்தினம் தோட்டக்கலை துறை உதவி அலுவலர் செந்தில், அணைக்கட்டு தாசில்தார் ஹெலன்ராணி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று சேதமான வாழை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கிருந்த அவற்றின் உரிமையாளர்களிடம் சேதம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

இதேபோல் அணைக்கட்டு தாலுகாவில் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயிகள் வைத்திருந்த வாழை மரங்கள் புயலின் போது வீசிய பலத்த காற்றால் வேரோடு சாய்ந்தது. அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக அவற்றை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கஜா புயல் பாதிப்பால் சேதமான வாழை மரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: