டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை 167 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்

ஈரோடு, நவ.15: டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுப்புறத்தை சுகாதாரமற்ற முறையில் பராமரித்த 167 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் டெங்கு, பன்றி மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஈரோடு கலெக்டர் கதிரவன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு பள்ளிகள், உணவு கடைகள், வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் இயங்கினால் சம்மந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

 இதேபோல் மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான், மாநகர் நல அலுவலர் சுமதி, மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்புகள், விடுதிகள், ஓட்டல்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பு இன்றி வைத்திருப்பவர்களுக்கு அபராதமும் விதித்து வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் கூறுகையில்,

ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பினை தடுக்க மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதில் சுற்றுப்புறத்திலண கொசுக்கள் உற்பத்தியாகும் படி வைத்திருந்தால் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குதல் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 இதில் குடியிருப்புகளுக்கு ரூ. 1,000, கடைகளுக்கு ரூ. 5ஆயிரம் வரை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் தற்போது வரை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காத 167 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான் கூறினார்.

Related Stories: