சிசிடிவி காமரா பொருத்துவது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், அக். 17: திருவள்ளூரில் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமரா வசதி உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலையம் அருகே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு, மாவட்ட டாஸ்மாக் சங்க தலைவர் கே.கேசவன் தலைமை வகித்தார். கோரிக்கைகள் குறித்து டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.விஜயன், கே.ராஜேந்திரன், ஜி.சந்திரன் ஆகியோர் விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘’தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கான பொது பணியிட மாறுதல் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகியவற்றின் மீது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை ஆணையை நீக்குவதற்கு நிர்வாகம் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பெட்ரோல் விலை மற்றும் பேருந்து கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வை கருத்தில்கொண்டு எப்.டி.சி தொகையை மாதம் ரூ.1,000 ஆக வழங்க வேண்டும். மேலும், கடை ஊழியர்களுக்கு மருத்துவ செலவுகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமரா பொருத்துவது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என கோஷமிட்டனர். முடிவில், ஜி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: