பொள்ளாச்சி நகரில் எச்சரிக்கையை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்

பொள்ளாச்சி,அக்.12: பொள்ளாச்சி நகரில் எச்சரிக்கையை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை, நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்களின் ஆக்கிரமிப்பு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை ரோடு, மத்திய பஸ்நிலையம், தேர்நிலை, பாலக்காடு ரோடு, மார்க்கெட்ரோடு, கோட்டூர்ரோடு உள்பட பல இடங்களில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் தனியார் பிளக்ஸ் போர்டுகள் அதிகளவில் வைக்கப்படுகிறது. நகரில் உள்ள முக்கிய இடங்களில் ரோட்டை மறைக்கும் அளவிற்கு ஆங்காங்கே வைக்கப்படும்  பிளக்ஸ் போர்டுகளால் இடையூறு அதிகளவில் உள்ளதாகவும், இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து சில வாரத்திற்கு முன்பு, நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தின்போது, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பிளக்ஸ்போர்டுகள் வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டும் அதனை யாரும் முறையாக கடைபிடிக்கவில்லையென்று கூறப்படுகிறது. இதனால், மீண்டும் பிளக்ஸ்போர்டுகளின் ஆக்கிரமிப்பு அதிரித்துள்ளதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நேற்று, போலீசார் உதவியுடன் பிளக்ஸ்போர்டுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் மகாலிங்கபுரம், நியூஸ்கீம்ரோடு, தேர்நிலை, பாலக்காடுரோடு. கோட்டூர்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்ட பிளக்ஸ்போர்டுகளை போலீஸ் பாதுகாப்புடன்,  நகராட்சி ஊழியர்கள், வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த பலரும், தங்கள் வைத்த பிளக்ஸ் போர்டுகளை தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும், ஏற்கனவே அறிவித்ததுபோல் நகராட்சிக்குட்பட்ட, அனுமதி அளிக்கப்பட்ட  குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிளக்ஸ்போர்டு வைக்க வேண்டும் எனவும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், சம்பந்தபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: