குளத்தூர் அருகே பலத்த மழையால் வேடநத்தம் தரைமட்ட பாலம் சேதம்

குளத்தூர்,அக்.11: குளத்தூர் அருகே பலத்த மழைக்கு வேடநத்தம் தரைமட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் தடுமாறி செல்வதால் பாலத்தை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். குளத்தூரையடுத்த வேடநத்தம் கிராம பகுதியில் கடந்த 8ம் தேதி பெய்த கனமழையால் வேடநத்தத்திலிருந்து குளத்தூர் செல்லும் சாலையில் உள்ள இரண்டு தரைமட்ட பாலங்கள் சேதமடைந்தன. இந்த இரண்டு தரைமட்ட பாலங்களிலும் தரமற்ற சாலை அமைப்பதால் அடிக்கடி சிதிலமடைந்து உருக்குலைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘கடந்த பல வருடங்களாகவே தரைமட்ட பாலங்கள் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு சிரமமான முறையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தால் ஏதோ கண்துடைப்புக்கு அப்பகுதியிலுள்ள மண்ணை அள்ளிப்போட்டு சாலைகளை ஒட்டு போட்டு சென்றுவிடுவர். பின்னர் ஓரிரு வாகனங்கள் சென்றதும் வாகனத்தின் பின்னாலேயே சாலையும் சென்றுவிடும். இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்பகுதி சாலை திருச்செந்தூர்-ராமேஸ்வரம் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. எனவே போக்குவரத்திற்கு லாயக்கற்ற இந்த இரண்டு தரைமட்ட பாலத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை திடமாக அமைத்திட சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: