மேலூர் அருகே விநோத திருவிழா வைக்கோல் பிரி சுற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேலூர், செப். 26: மேலூர் அருகே கோயில் திருவிழாவில், பக்தர்கள் வைக்கோல் பிரி சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் கோயிலில் ஆண்டு திருவிழா 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது அம்மனாக வழிபட 7 சிறுமிகளை கோயில் பூசாரி தேர்வு செய்தார். விழா நிறைவு நாளான நேற்று, ஆண்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றியும், பல்வேறு முகமூடிகளை அணிந்தும், விரதம் இருந்த பெண்கள் தலையில் மதுக்கலயத்தை ஏந்தியும், இளம்பெண்கள் விதவிதமான மண்சிலைகளை ஏந்தியும் வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, 7 கிமீ தொலைவில் உள்ள குறிச்சிப்பட்டியில் உள்ள பெரிய ஏழைகாத்தம்மன் கோயிலில் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஊர்வலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 15 நாள் விரதம் முடிந்த நிலையில் இன்று வீடுகளில் கிடா விருந்து நடைபெறுகிறது.

Related Stories: