மதுரை-போடி இடையே ஆமை வேகத்தில் நகரும் அகல ரயில்பாதை பணி

மதுரை, செப். 26: யானைப்பசிக்கு சோளப்பொரி போல நிதி ஒதுக்கப்படுவதால், மதுரை-போடி அகல ரயில்பாதை திட்டப்பணி ஆமை வேகத்தில் நகருகிறது. இதனால்,  மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை டிசம்பருக்குள் முதற்கட்டமாக ரயில் இயக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.  மதுரையில் இருந்து உசிலம்பட்டி வழியாக போடி வரை மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து இருந்தது. 8 ஆண்டுகளுக்கு முன், மீட்டர் கேஜ் பாதையை அகலரயில் பாதையாக மாற்ற, ரூ.130 கோடியில் திட்டம் உருவானது. இதற்காக 2010 டிசம்பர் இறுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 2015ல் பணியை முடித்து அகலப்பாதையில் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டது.  ஆனால், யானைப்பசிக்கு சோளப்பொரி போல,  அவ்வப்போது ஒதுக்கப்படும் நிதியால், ஆமை வேகத்தில் பணி நகருகிறது.

2011 ரயில்வே பட்ஜெட்டில் ரூ.15 கோடியும், 2012ல் ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் மீட்டர் கேஜ் தண்டவாளத்தை அகற்றும் பணி மட்டுமே நடைபெற்றது. இதனால், தொடர்ந்து திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இடையிடையே ஒதுக்கப்பட்ட நிதி மூலம் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலையேறியதை தொடர்ந்து, மதிப்பீடு ரூ.320 கோடியாக அதிகரித்தது.    கடந்த 2017ல் அதிகபட்சமாக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் மதுரையில் இருந்து பழங்காநத்தம், மாடக்குளம், வடிவேல்கரை, மேலக்குயில்குடி, வடபழஞ்சி, செக்கானூரணி, கருமாத்தூர் வழியாக உசிலம்பட்டி வரை அகலப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளம் பொருத்த செம்மண் மேடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஜல்லிக்கற்கள் பரப்பி, தண்டவாளம் பொருத்தப்பட வேண்டும். இந்த பணிகள் இன்னும் தொடங்கவில்லை.வடபழஞ்சி, கருமாத்தூரில் பெரிய அளவிலான மேம்பாலம் கட்டும் பணி 75 சதவீதம் முடிந்துள்ளது. இதனிடையே, வடபழஞ்சி மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டுமென அங்குள்ள கிராமமக்கள் மன்றாடி வருகின்றனர்.

முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கு முன், அதாவது 2018 டிசம்பர் இறுதிக்குள் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை அகலப்பாதை பணியை முடித்து ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இறுதிகட்ட பணிகளை கூட நெருங்காத நிலையில் அதற்கான வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. 2வது கட்டமாக உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி கணவாய் வழியாக போடி வரை 55 கி.மீ. தூரம் அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிக்க மேலும் சில ஆண்டுகளாகும் என கூறப்படுகிறது. இது குறித்து ரயில் போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகையில், ‘மதுரை, உசிலம்பட்டி இடையே திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று இருந்தால், திட்டமிட்டபடி டிசம்பருக்குள் ரயில் சேவைக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கலாம். ஆனால், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், இன்னும் 3 மாதத்தில் மேம்பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் பொருத்தும் பணி முடிப்பது சாத்தியமில்லை. விரைவாக பணி முடித்து உசிலம்பட்டி வரை ரயில்சேவைக்கு பச்சைக் கொடி காட்டுவது எப்போது? என்பதே கேள்வி” என்றனர். புதிய ரயில் நிலையங்கள் மதுரையில் இருந்து அமையும் அகலப்பாதையில் வடபழஞ்சி, செக்கானூரணி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் ரயில்நிலையம் அமைய திட்டம் தயாராகி உள்ளது.

Related Stories: